சென்னை: கோயம்புத்தூரில் பள்ளியை சுத்தம் செய்வதாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு முன் தகவல் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூட்டம் நடத்தியிருக்கின்றனர் எனவும், எந்த அரசியல் அமைப்பினரும் பள்ளி வளாகத்தில் கூட்டங்களை நடத்த அனுமதி இல்லை எனவும், அதனை உறுதிப்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை டிபிஐ வளாகத்தில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 61 வட்டார கல்வி அலுவலர் பணி உயர்வுக்கான நியமன ஆணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி , 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியது போல், துறையின் வளர்ச்சிக்கும் பணியாற்றுவார்கள்.
மழைக்காலம் என்பதால், துவங்குவதற்கு முன்னரே இடியும் நிலையில் உள்ள சுற்றுச்சுவர், பள்ளிக்கட்டடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள கோப்புகள், வருகைப்பதிவேடு விவரங்கள் போன்றவற்றை உயரமான, பாதுகாப்பான இடங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எல்கேஜி, யுகேஜி தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் நிதித்துறை இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை இன்று நடைபெறுகிறது. அதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பின் நிதியமைச்சருடன் நான் ஆலோசிக்க உள்ளேன். அப்போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் உட்பட அனைத்தையும் விவாதித்து முடிவு எடுக்க உள்ளோம்.
தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என்பதை நிதிநிலையைப் பொறுத்து முதலமைச்சரின் அலுவலகம் தான் முடிவு செய்யும்.
234/77 என்ற புதிய திட்டத்தின் தொடக்கமாக இன்று சேப்பாக்கம் தொகுதியில் உள்ள பள்ளியை ஆய்வு செய்தேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சென்று 77 வகையான உட்கூறுகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளேன். அப்போது CBSE, ICSE பள்ளிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் கூறியது போல் ஒவ்வொரு பள்ளியையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது ஆசையாக உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 58,000 பள்ளிகளையும் ஆய்வு செய்ய நேரமிருப்பின் ஆய்வு மேற்கொள்வேன்.
முதலில் நான் ஆய்வு செய்தப் பின்னர் மாவட்டத்தில் உள்ள பிறப் பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகளின் மூலம் அறிக்கை பெறுவோம். கோயம்புத்தூரில் உள்ள பள்ளியை சுத்தம் செய்ய வந்த RSS குழுவினர், அங்கு உறுதிமொழி எடுத்துச்சென்றுள்ளனர் . இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்று கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையரும், மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலரும் உறுதியளித்துள்ளனர்.
பள்ளிகளில் எந்த ஒரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கல்வித் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகள், கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்த பின் அதிலுள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வு, தேவைப்படும் நிதியுதவி போன்றவை குறித்து முதலமைச்சரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளேன். இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதால், அவர்களே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு