கடந்த ஆண்டுவரை 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் அன்றே மறுகூட்டல், மறுமதிப்பீடு விடைத்தாள் நகல் பெறுதல் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளைத் தேர்வுத்துறை வெளியிடும். ஆனால், இந்தாண்டு கடந்த 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும், தற்போதுவரை மேற்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதியுடனும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கை இந்த மாத இறுதியிலும் முடிவடைய உள்ளன.
உயர்கல்வி சேர்க்கைக்கான கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில், தேர்வுத்துறை மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்திவருவது மாணவர்கள், பெற்றோர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
விடைத்தாள் நகல்களைப் பெற்ற பின்பு, ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை செய்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு செய்து அதற்கான முடிவுகள் வருவதற்கு மேலும் காலதாமதம் ஆகும். எனவே, உடனடியாகத் தேர்வுத்துறை மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றிற்கான உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பது மாணவர்கள், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.