இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்துவருவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன. தமிழ்நாட்டில் மார்ச் 31ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் நீட்டிக்கப்படுகிறது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா, உயர் கல்வித் துறையின்கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”மார்ச் 31ஆம் தேதிவரை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தங்களது வீட்டிலிருந்தே பணிபுரியலாம். கல்வி சம்பந்தப்பட்ட பணிகளையும், பாடத்திட்டம், அடுத்த பருவத்திற்கான முன்னேற்பாடுகளையும் செய்யலாம். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அனைத்து விடுதிகளும் சுத்தம்செய்யப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்கள், விடுதிக் காப்பாளர்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் பதிலளிக்கும்வகையில் தேவை ஏற்பட்டால், 30 நிமிடத்திற்குள் கல்லூரிக்கு வருகைபுரிய தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கல்லூரிக்கு மிக அருகில் உள்ள ஆசிரியர் ஒருவர் விடுதி, கல்லூரிக்கான திறவுகோல்களை வைத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தொடர்புகொண்டு சொல்லும் பணிகளை உடனடியாகச் செய்துதர வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அழைத்தால் அவரின் வேண்டுகோளை ஏற்க வேண்டும். அதனை மறுப்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதியில் தங்கியிருக்கும் அயல்நாட்டு மாணவர்களுக்காக விடுதிகள் திறந்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்ற சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களை அவசரம் ஏற்பட்டால் தொடர்புகொள்ளும் நிலையில், தொலைபேசி எண்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் மதுரையில் ஒருவர் உயிரிழப்பு! அதன் பின்னணி என்ன?