பள்ளியில் பயிலும் மாணவர்களை தனித் தேர்வர்களாக எழுதவைப்பது என்பது விதிகளை மீறிய செயலாகும். சில தனியார் பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகும்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற பார்வையற்ற மாணவர்கள் உள்பட 20 மாணவர்களை தனித் தேர்வர்களாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் விண்ணப்பிக்க செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சம்மந்தப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர் முடிவு செய்துள்ளார். பள்ளி நிர்வாகத்தின் மூலம் தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தலைமையாசிரியரின் இந்தச் செயலால் பள்ளியில் பயிலும் 20 மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனதுடன், 11ஆம் வகுப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க கல்வியாளர்கள் கோரிக்கை!