இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் , துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நீட் தேர்வு
அதில் கூறியிருந்ததாவது, “தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சரும், அவரது மகனும், தி.மு.க ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செயப்படும் என பரப்புரை செய்தனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யும் சூத்திரம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று சத்தியம் செய்தனர்.
இதனை நம்பி வாக்காளர்கள் வாக்களித்தனர். ஆனால் தற்போது நீட் தேர்விற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
தங்களுக்கு மட்டுமே தெரிந்த வல்லமையையும், சூத்திரத்தையும் பயன்படுத்தி தி.மு.க அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர்கள், அவர்களது பெற்றோர் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
திமுக ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பொருடகளின் விலையும், கட்டுமான பொருட்களின் விலையும் உயர்வது வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரமும் புரியாமல், மக்களின் துயரங்களும் தெரியாமல் செயல்படுவதுதான் இதற்கு காரணம்.
கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து, வருமானம் சுருங்கிப் போய் இருக்கும் மக்களின் துயரத்தைப் போக்க திமுக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆட்சி அமைந்த உடன் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாகவும் வாக்களித்த திமுக, இதுவரை தனது வாக்குறுதியைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது.
விவசாயிகள்
தமிழ்நாட்டுபொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். விவசாயிகளுக்கு எண்ணற்ற வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக, ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.
விதை, உரம் போன்ற இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படவும் இதுவரை எதையும் செய்யாத திமுக அரசின் போக்கு, பெரும் பொருளாதார சீர்குலைவில் கொண்டுபோய் விடும் என்று எச்சரிக்கிறோம்.
காவிரிநீர்
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் முழுமுதற் காரணம். கடந்த திமுக ஆட்சியின் போது கர்நாடகத்தில் பல புதிய அணைகள் கட்டப்பட்டதையும், அதனால் தமிழ்நாட்டிற்கு இயற்கையாக காவிரியில் வந்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து போனதையும் வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது.
வட தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களில் முக்கியமான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே தற்போது கர்நாடகம் பெரும் அணையைக் கட்டியிருக்கிறது. மேலும் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காத அலவிற்கு பிரம்மாண்ட அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதனை திமுக அரசு விழிப்புடனும், முனைப்புடனும் செயல்பட்டு புதிய அணைகள் கட்டப்படுவதை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படவும் மேற்சொன்ன கோரிக்கைகளை திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டுவர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விழைகிறது.
திமுக அரசின் மெத்தன போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கச் செய்யவும் வரும் ஜூலை 28 ஆம் தேதி காலை 10 மணி அளவில் கழக உடன்பிறப்புகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடு முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாடு மக்களின் உரிமைக் குரல்களாய் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீரா பாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் ட்வீட்!