சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலின்போதும், 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போதும், 5 சவரன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது மகனும் மேடைதோறும் பேசினார்கள்.
அவர்களின் பேச்சை நம்பி சுமார் 48 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்துக்கடன் வாங்கி உள்ளார்கள். ஆனால், இந்த விடியா அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனைகளை விதித்தது. இந்தப் புதிய நிபந்தனைகளின்படி சுமார் 35 லட்சத்து 38 ஆயிரம் நபர்கள் நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதியினைப் பெறவில்லை என்றும், சுமார் 13 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி பெறத் தகுதி உள்ளவர்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆணைப் பிறப்பித்தது.
இதனை அடுத்து , தொடக்க வேளாண்கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையினை இந்த அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அப்பணத்தைத் தராமல், அந்தந்த சங்கங்களில் உள்ள வைப்பு நிதியினை, நகைக்கடன் தள்ளுபடிக்கும், அன்றாடப் பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கியதாகச் செய்திகள் கூறுகின்றன.
இதனால், தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின்கீழ் வரும் கூட்டுறவு சங்கங்கள் உரம், விதை போன்ற விவசாயக்கடன்கள் வழங்குதல், அவசர கால நகைக்கடன் வழங்குதல், முதிர்ச்சியடைந்த வைப்பு நிதிக்கான தொகையினை உரியவருக்கு வழங்குதல் போன்ற அன்றாடப் பணிகளுக்குக்கூட போதிய நிதி இல்லாமல் திண்டாடி வருகின்றன.
நிதி இல்லாததால், வாடிக்கையாளர்களுக்கும், கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் தேவையற்ற சச்சரவுகள், வீண் விவாதங்கள் எழுந்தன. கூட்டுறவுக்கடன் சங்கங்களே இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியது. எனவே, சங்க அலுவலர்கள் நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையினை உடனடியாக வழங்கக்கோரி இந்த விடியா அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை இந்த அரசு நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையினை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை.
ஐந்து சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்த சுமார் 4,450 கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, அச்சங்கங்கள் தள்ளுபடி செய்த தொகையினை உடனடியாக வழங்கவும், மேலும் அச்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.