சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நேற்று (மார்ச் 17) அறிவிக்கப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இன்றும் (மார்ச் 18), நாளையும்(மார்ச் 19) வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தனர்.
எடப்பாடி பழனிசாமியை போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அக்கட்சியின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களை நாடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாளை(மார்ச் 19) மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதால் நாளைக்கே போட்டியின்றி தேர்வு என்று அறிவிக்க வாய்ப்புள்ளது. மார்ச் 26ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது.
பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புபடி இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ள ஈபிஎஸ் தரப்பினர், பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்திலும் சமர்பிக்க இருக்கின்றனர். தற்போது வரை இந்திய தேர்தல் ஆணைய ஆவணப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே உள்ளன.
மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல்(சிவில்) வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமியின் தரப்பின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக வரலாற்றில் 5 ஆண்டுகள் நிறைவு பெறாமல் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் ஒரே ஓட்டு மூலம் தேர்வு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளே கடந்த நிலையில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குமரியில் திருவள்ளுவர் சிலையை சுற்றிப்பார்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!