தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்ற பின்பு முதல்முறையாக, தமிழ்நாடு வந்துள்ள தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்திப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர் இல்லத்திற்குச் சென்றார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழிசை சௌந்தர ராஜன் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துக்கொண்டு, பொன்னாடை அணிவித்தார்.
இந்த சந்திப்பு நடந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , " தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தெலங்கானா மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது தமிழர்களுக்குப் பெருமையான ஒன்று. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆந்திரா,தெலங்கானா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக மாநிலம், மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியும் நேரில் சென்றும் வலியுறுத்தியுள்ளோம்.
டெங்கு பிரச்னை சிங்கப்பூரிலும் இருக்கிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் வந்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மேகேதாட்டு அணைக்கு அனுமதி கூடாது: மத்திய அரசிடம் வைகோ வலியுறுத்தல்