இந்தியா முழுவதும் ஒன்பது மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சுமார் 26 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்திவருகிறது. சென்னையில் மூன்று இடங்களிலும், மதுரை, தென்காசியில் ஒரு இடத்திலும் அமலாக்கத் துறை அலுவலர்கள் பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக திருவல்லிக்கேணியில் உள்ள பாப்புலர் ப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் உறுப்பினர் மொகைதீன்,புரசைவாக்கத்தில் உள்ள மாநில செயற்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், மதுரையில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது யூசூப், தென்காசியில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா உளளிட்டோர் வீடுகளிலும், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநில அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.
குறிப்பாக பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்திய அமைப்பிற்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து, அந்த அமைப்பின் வரவு செலவு கணக்குகள் மற்றும் நிர்வாகிகளின் வரவு செலவு கணக்குகள் ஆகியவை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பிப்ரவரி மாதம் டெல்லி கலவரம் தொடர்பாகவும் சில ஆதாரங்கள் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் மாநில அலுவலகத்தில் சோதனை நடைபெற்றபோது பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடக்கும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டங்களை நீர்த்துப்போக செய்யவே பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க...ஒன்றா ரெண்டா வருஷங்கள் எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா?