சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக டெல்லி அமலாக்கத் துறையினரால் பெறப்பட்ட தொடர் புகார்களின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்று(ஆக.5) காலை முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை, நுங்கம்பாக்கம் மோகன குமாரமங்கலம் தெருவில் உள்ள பைனான்சியரான ரமேஷ் துக்கார் என்பவரது வீடு, அவரது எழும்பூரில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனம், கிரீம்ஸ் சாலையில் உள்ள நிறுவனம் உட்பட சென்னையில் சுமார் 5 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்கள் தொடர்பாக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சொதனையின் முடிவில் முழு விவரங்கள் செய்திக் குறிப்பாக வெளியிடப்படும் என அமலாக்கத்துறை அலுவலர்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்.எல்.சி விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்