சென்னை: தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் சட்டவிரோதப் பணபரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது திடீரென செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் நெருக்கமானவர்கள் பலரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவரான சுவாமிநாதனின் ஓட்டுநர் சிவா வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 லட்சம் ரூபாய் பணம், 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி தரப்பில் தொரடப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், செந்தில்பாலாஜியை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், அமலாக்கத்துறையினர் வரும் 12ஆம் தேதி வரை செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து நேற்று(ஆகஸ்ட் 7) அமலாக்கத்துறையினர் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு செந்தில் பாலாஜியிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று(ஆகஸ்ட் 8) காலை 10 மணி முதல் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, அவரது தம்பி அசோக் மற்றும் உதவியாளர்கள் உதவியுடன் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாகவும், செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கில் 1.63 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாகவும் அமலாக்கத்துறையினர் கேள்விகளை தயார் செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவரான சாமிநாதன் மறைத்து வைத்திருந்த 60 நில பத்திரங்கள் யாருடையது எனவும், செந்தில்பாலாஜி பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களா? எனவும் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
அதேபோல் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்குத் தொடர்பாக, அந்த காலத்தில் போக்குவரத்துத் துறையில் பணிக்குச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி, மத்திய குற்றப்பிரிவினர் பெற்ற அந்த தகவல்களையும் வைத்து அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், செந்தில்பாலாஜியின் ஆடிட்டரை வரவழைத்து விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விடிய விடிய விசாரணை!