சென்னை: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆம்வே நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பி இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சதுரங்க வேட்டை படத்தில் காட்டப்பட்டது போல் மல்டி-லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனத்தின் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உறுப்பினராக இணைந்தால், விரைவில் பணக்காரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி லட்சக் கணக்கானோரைத் தூண்டிவிட்டு தங்களது நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைத்துள்ளது.
சங்கிலி அமைப்பில் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் பொருட்களை விற்பனை செய்தல் என்ற போர்வையில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான கூட்டங்களையும் இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. புதிய உறுப்பினர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காகப் பொருட்கள் வாங்காமல், உறுப்பினர்களாகச் சேர்வதன் மூலம் பணக்காரர்களாக ஆக வேண்டும் என அதிக விலைகொடுத்து வாங்குகின்றனர்.
பல நூறு கோடி மோசடி: இதன், மூலம் இந்நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகக் குறிப்பிட்டு ஆந்திரா சிஐடி காவல்துறையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு பரிசு சீட்டு மற்றும் தடை செய்யப்பட்ட பண சுழற்சி திட்டம் சட்டம் 1978 அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தது. மேலும், அந்த நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதன்மை செயல்பாட்டு அதிகாரி வில்லியம் பிங்கேனே மற்றும் இரு இயக்குநர்கள் என 3 பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை அடிப்படையாக வைத்து டெல்லி அமலாக்கத் துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் ஆம்வே நிறுவனம், தங்கள் நிறுவன பொருட்களை நேரடி விற்பனை செய்யாமல், மல்டி-லெவல் மார்க்கெட்டிங் நெட்வொர்க் என்ற போர்வையில் இமாலய மோசடியைச் செய்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
உண்மைகளை அறியாத பொதுமக்கள்: மேலும், அந்நிறுவனம் வழங்கும் பெரும்பாலான தயாரிப்புகளின் விலை மிகையானவை எனவும், உண்மைகளை அறியாத பொதுமக்கள், இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாகச் சேர தூண்டப்பட்டு, அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குவதாகவும் அமலாக்கத்துறை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆம்வே நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற பிரமிடு திட்டம் மற்றும் மல்டி-லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையில் ஒருவர் தனக்குக் கீழாக உறுப்பினர்களைச் சேர்க்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் சில்வர், கோல்ட், பிளாட்டினம், டைமண்ட் ஆகிய தரத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
இதில் முதல் நிலை உறுப்பினர்கள் பல்வேறு உறுப்பினர்களைச் சேர்த்து அதன் மூலம் கமிஷனாக கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்ததாகக் கூறி கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு ஆசை காட்டுவதன் மூலம், சுமார் 5 லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள் இந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஆம்வே தன் சொந்தத் தயாரிப்பு என தெரிவித்து விநியோகித்த பொருட்கள் அனைத்தும் தரம் அற்றவையாக இருப்பதாகவும், வணிக நிறுவனமாகப் பதிவு செய்துள்ள ஆம்வே நிறுவனம், ஆட்களைச் சேர்த்து மோசடி செய்வதில் முக்கியத்துவம் காட்டி செயல்பட்டது அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
21 கோடியில் இருந்து 2859 கோடிக்கு உயர்ந்த பங்குகள்: குறிப்பாக 1996-1997-ல் 21 கோடியாக இருந்த ஆம்வே நிறுவனத்தின் பங்குகள் தற்போது 2 ஆயிரத்து 859 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதாகவும், அதிலும் 2002-2003 முதல் 2021-2022 வரை இந்நிறுவனம் 27 ஆயிரத்து 562 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே இடைவெளியில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள அதன் வினியோகஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ஆம்வே நிறுவனம் 7 ஆயிரத்து 588 கோடி ரூபாய் கமிஷனாக வழங்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்வே நிறுவனம் தனது தயாரிப்புகளிலும், விற்பனையிலும் கவனம் செலுத்தாமல், தங்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருப்பதன் மூலம் எவ்வாறு பணக்காரர்களாக மாறலாம் என்பதைப் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 வங்கிக் கணக்குகளில் இருந்த 346 கோடி: மேலும், இந்த மோசடி தொடர்பாகச் சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, இயந்திரங்கள் வாகனங்கள் நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவை அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 412 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், 36 வங்கிக் கணக்குகளில் இருந்த 346 கோடி ரூபாய் வங்கி வைப்புத் தொகை என ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை டெல்லி அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதையும் படிங்க: விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியவர்களின் சொத்துகள் முடக்கம்