சென்னை: கடந்தாண்டு மே மாதம் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் தொடர்பான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்து வரும் லாபத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகவும் கூறி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக புகார்கள் குவிந்தன.
இதன் அடிப்படையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவன நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்டமாக ராஜசேகர், உஷா ராஜசேகர் , மைக்கேல் ராஜா உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொதுமக்களிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் 2,438 கோடி ரூபாய் வசூல் செய்தது விசாரணையில் அம்பலமானது.
இந்த ஓராண்டு காலத்தில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அடுத்தடுத்து நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக 61 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை 6.35 கோடி பணம், 1.13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், 22 கார்கள், 96 கோடி வங்கி கணக்கு வைப்பில் இருந்த பணம் முடக்கம் செய்து 103 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பாஜக நிர்வாகியாக இருந்த ஹரிஷ் கைது செய்யப்பட்டார். பாஜகவில் பொறுப்பு பெறுவதற்கு பணம் கொடுத்ததாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணையில் வாக்குமூலமாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இரண்டு பாஜக நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பாஜக பிரமுகர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ்-யை வழக்கிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக பணம் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக சம்மன் அனுப்பி நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆஜராகாததால் அவருக்கு லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டது. முக்கியமான நிர்வாகிகள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டசும் மற்றும் ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
தற்போது ஒரு வருடம், ஒரு மாதம் விசாரணையை முடித்து ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி தொடர்பாக சுமார் 3000 பக்க குற்றப்பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த 3000 பக்க குற்ற பத்திரிக்கைக்கு தொடர்புடைய ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் கட்டு கட்டாக சமர்ப்பிக்கப்படும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றப் பத்திரிக்கையின் மூலம் இந்த மோசடி வழக்கில் முக்கிய அரசியல் பிரமுகருக்கு உள்ள தொடர்பும் அம்பலமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த குற்ற பத்திரிக்கை தாக்கல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Senthi Balaji கைதின் போது மனித உரிமை மீறல் - அமலாக்கத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ்!