சென்னை: அண்ணாநகர் அடுத்த நொளம்பூர் பகுதியில் ஏ.ஆர்.டி ஜுவல்லரி என்கிற பெயரில் நகைக்கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த நகைக்கடையில் ஆல்பின், ராபீன் என்கிற சகோதரர்கள் உரிமையாளராக இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆருத்ரா, ஐஎஃப்எஸ் மோசடி நிறுவனங்களைப் போல ஏ.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனமும் தங்க நகை சேமிப்பு, தங்க நகை கடன், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3000 வீதம் வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து இருந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஏ.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரியில் முதலீடு செய்த பொதுமக்கள் அந்நிறுவனம் ஏமாற்றி மோசடி செய்ததாக காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தனர். அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏ.ஆர்.டி ஜூவல்லரியின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் மற்றும் முகவர்களாக செயல்பட்டவர்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் அவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள், நொளம்பூர் பகுதியில் உள்ள ஏ.ஆர்., வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் வருவாய்த்துறையின் அதிகாரிகள் முன்னிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நொளம்பூர் பகுதியில் உள்ள ஏ.ஆர்., வணிக வளாகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காக இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காவல்துறை அடக்குமுறையால் போராட்டம் தள்ளிவைப்பு.. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேதனை!