சென்னை: முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டமானது நேற்று (அக். 25), முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலிமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தினை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் வரவேற்புரையாற்றி தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.
பல்வேறு திட்டங்கள்
அப்போது அவர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இக்குழுவின் முதலாவது கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்தும் உறுப்பினர்கள் வழங்கிய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை உயர்த்தினார்.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். கரோனா நோய்த் தொற்றை பரவாமல் தடுக்கும் வகையில் தகுதியுடைய மக்களுக்கு 72 விழுக்காட்டினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்றின் காரணமாக இழந்த பள்ளிப் படிப்பினை ஈடுசெய்யும் வகையில் ரூ.200 கோடி செலவில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற மாபெரும் திட்டத்தினை நடைமுறைபடுத்தியுள்ளார்.
தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முடிவுகளின் காரணமாக அரசின் அரிய நிதியினை வீணாகாமல் தடுத்தது, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நிலுவைக் கடனை மாற்றியமைப்பதற்கு ரிசர்வ் வங்கியின் உதவியைப் பெறுவது போன்று பல்வேறு திட்டங்கள் அறிவித்ததுள்ளார்” எனக் சுட்டிக்காட்டினார்.
கருத்துக் கேட்பு
இதையடுத்து அரசின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், அரசின் நிதிநிலையினை திறம்பட கையாள்வது குறித்தும் பொருளாதார ஆலோசனைக் குழுவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் சில கருத்துகளை கேட்டறிந்தார்.
பல்வேறு சமூக நலத் திட்டங்களை மேலும் எளிதில் அணுகுவதை அரசு கருதலாம் எனப் பொருளாதார அறிஞர் எஸ்தர் டப்லோ கூறினார். பெரும் முதலீட்டு திட்டங்களுக்குத் தேவையான அனுமதிகளை விரைவில் வழங்கும் நடைமுறைகள், தமிழ்நாட்டின் மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த கல்வி பெறும் வகையில் உயர்கல்வியின் தரத்தினை உயர்த்துவதற்கான முதலீடுகளை மேற்கொள்ளுதல் போன்ற பரிந்துரைகளை டாக்டர் ரகுராம் ராஜன் வழங்கினார். மேலும் கடன் அளவை பற்றி அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
நடைமுறையில் உள்ள ஒன்பது முக்கியமான திட்டங்கள் உட்பட விடுபட்ட கூறுகளை ஒன்றிணைத்து ஒரு சமூக பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு பேராசிரியர் ஜீன் டீரீஸ் முன்மொழிந்தார். இதற்காக ஒரு வலுவான, வெளிப்படையான பொறுப்புடைய அமைப்பின் அவசியத்தைப் பற்றி கூறினார்.
உலகளாவிய அடிப்படை வருமானம் (Quasi universal basic income) திட்டத்தை செயல்படுத்த சாத்தியமான வழிமுறைகள், உலக அளவில் ஆற்றல் நிலை மற்றும் பொருளாதார வேகத்தை நிலைநாட்டுவதன் தேவை பற்றி டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் கூறினார்.
மாநிலத்தின் மின்துறை நிலைக்கான தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை டாக்டர் எஸ். நாராயணன் ஆலோசனை வழங்கினார். இறுதியாக, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு நன்றியுரை ஆற்றினார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை