சென்னை: அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தற்போது வரை 1 கோடியே 62 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். 60.82 விழுக்காடு மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாம் மூலம் 87 லட்சத்து 91 ஆயிரம் இணைப்புதாரர்களும், ஆன்லைன் முறையில் 74,67,000 மின் இணைப்புதாரர்களும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 77.53 விழுக்காடு மின் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்ச அளவாக கிருஷ்ணகிரியில் 50.93 விழுக்காடு அளவே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
ஜனவரி 31, 2023 வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,811 மின்வாரிய பிரிவு அலுலகங்கள் மூலம் ஆதாரை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஜனவரி மாதம் கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. நடமாடும் சிறப்பு முகாம் மூலம் உரிய இடங்களுக்கு சென்று மின் நுகர்வோரின் ஆதாரை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் நாளை சிறப்பு முகாம் நடைபெறாது. உரிய ஆவணங்களை சமர்பித்தால் 48 மணி நேரத்திற்குள் மின் இணைப்புதாரர்களின் பெயர் மாற்றம் செய்து தரப்படும். இறந்தவர்களின் பெயரில் மின் இணைப்புகள் இருக்கும்போது, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதில் சிக்கல் உள்ளது என சொல்கின்றனர்.
முன்னோர்கள் இறந்தவுடன் கண்டிப்பாக வருவாய்துறை மூலம் பட்டா மாறுதலை அனைவரும் செய்து விடுவர். அப்படியே பெயர் மாறுதல் செய்யாமல் இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை மொத்த மின் பயனாளர்களின் எண்ணிக்கையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும், எனவே அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்ய வேண்டுமா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
100 யூனிட் இலவச மின்சாரம் பறிபோகும் என்று பொய்யான பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். மின்சாரத்தை கொண்டு செல்லும் போது 15 விழுக்காட்டுக்கு மேல் மின் இழப்பு ஏற்படுகிறது. அதை குறைப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஆண்டு 0.75 விழுக்காடு அளவு மின் இழப்பை குறைத்ததன் மூலம் 560 கோடி மிச்சப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக பேச்சுவார்த்தை தொழிற்சங்கத்தினருடன் தொடர்ந்து வருகிறது. சுமூக தீர்வை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப DA உள்ளிட்டவற்றை உயர்த்திய பிறகும் அவர்கள் போராட்டம் நடத்துவதாக கூறுவது தவறு. விவசாயிகளுக்கான 50 ஆயிரம் மின் இணைப்பு பொங்கலுக்கு முன்பாக முழுவதுமாக கொடுத்து முடிக்கப்படும். 40,096 விவசாய மின் இணைப்புகள் நேற்று வரை வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 9,694 விவசாய மின் இணைப்புகள் இன்னும் வழங்கப்பட உள்ளது. அவை பொங்கலுக்கு முன்பாக வழங்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பிஎப் 7 வைரஸ் தாக்குதலை எதிர் கொள்ளத் தயார் - சென்னை மருத்துவர்கள்