சென்னை: வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து சீரமைப்பது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள திருவாரூர் தேர், பொது அரங்கம், மேல்தளம் உட்பட கோட்டம் முழுவதையும் சுற்றி ஆய்வு செய்தார். அப்போது துறையின் முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
![வள்ளூவர் கோட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12334145_thu.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி சீர் கெட்டுள்ளதால், அதனை நேரடியாக ஆய்வு செய்து சீரமைக்குமாறு முதலமைச்சர் ஆணையிட்டிருந்தார்.
அதிமுகவினருக்கு வள்ளுவரை பிடிக்கவில்லை
தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது தான் வள்ளுவர் கோட்டம். தமிழரின் அடையாளமும் வள்ளுவர் தான். வள்ளுவரின் திருக்குறளை கூட உலக பொதுமறை என்று தான் கூறுகிறோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில், சுமார் 10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பராமரிக்கப்படாமல், சீர்கெட்டுள்ளது. அதிமுகவினருக்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை.
![வள்ளூவர் கோட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-veluminister-7209106_02072021150652_0207f_1625218612_35.jpg)
திருவள்ளுவரை திமுக உறுப்பினர் என நினைத்துக்கொண்டு தொடர்ந்து புறக்கணித்தனர். சமச்சீர் பாடப் புத்தகத்தில் இருந்தும் வள்ளுவர் படத்தை நீக்கினர்" என்று குற்றஞ்சாட்டினார்.
விரைவில் புனரமைப்பு பணி
மேலும், "வள்ளுவர் கோட்ட அரங்கத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இவற்றையெல்லாம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி ஆதாரம் திட்டமிட்டு விரைவில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்.
அதன்பின்னர் அரசு விழாக்கள், பொதுமக்கள் விழாக்களை நடத்த கூடிய வகையில் வள்ளுவர் கோட்டம் நவீன முறையில் மேமபடுத்தப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'ஜெ. நினைவிடத்திலிருந்து அரசியல் பயணம்' - சசிகலா கொடுத்த ஷாக்