சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.20) சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில், தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களைத் தொடங்கி வைத்தார்.
இ-சேவை மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 9 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகள், பயனர் எண், கடவுச்சொல்லையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தை தொடங்கிடும் வகையில், முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.க. ஸ்டாலினிடம் நவீன மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச்செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் பிரவீன் நாயர், சட்டப்பேரவைச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் இணைய வழி சேவைகளை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.