தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மே 24ஆம் தேதிமுதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இன்றுடன் முடிவடையவிருந்த ஊரடங்கு உத்தரவை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதன்படி, இன்றுமுதல் மீண்டும் மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகள் மாலை 5 மணிவரை இயங்கத் தொடங்கியுள்ளது.
அதேபோல, மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி, இயந்திரம் பழுதுபார்ப்பவர்கள் போன்ற சுய தொழிலில் ஈடுபடுவோர் அரசின் இ-பதிவு இணையத்தில் பதிவு செய்துவிட்டு பணிக்குச் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காகப் பயணிக்க மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் தளர்வுகள் அமலுக்கு வருவதால், ஒரே நேரத்தில் ஏராளமானோர் இ-பதிவுக்கு விண்ப்பித்ததால், அரசின் இணையதளம் முடங்கியுள்ளது. அதனைச் சரிசெய்யும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.