தமிழ்நாட்டில் உள்ள 43 அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் லஞ்சப் புகாரில் சிக்கியதால், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் அதிரடி சோதனைகளையும், வழக்குப்பதிவும் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்கட்ட விசாரணையோ, விரிவான விசாரணையோ, எந்தவித ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் மீது வழக்குகளோ பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " 2020-21இல் மற்ற துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் மீது சுமார் 553 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1178 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு
கடந்த 2019-20ஆம் ஆண்டு செய்யப்பட்ட 483 வழக்குகள் ஒப்பிட்டு பார்க்கும்போது, 70 வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆண்டைப் பொறுத்தவரையில் 116 பேர் பொறி வைத்து பிடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020-21 பொறுத்தவரையில் 43 அரசுத் துறைகளைச் சேர்ந்த 1178 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 294 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகாரில் முதல்கட்ட விசாரணையும், விரிவான விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு முந்தைய 2019-20 இல் 1200 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், 374 அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகாரில் முதல்கட்ட விசாரணை, விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
முதலிடத்தில் போக்குவரத்து துறை
43 அரசுத் துறைகளில் போடப்பட்ட வழக்குகளில் போக்குவரத்து துறையில் 247 ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த தரவை, 2019-20 இல் 70 ஊழியர்கள் மீது பதிவு செய்த வழக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மூன்று மடங்கு அதிக ஊழியர்கள் லஞ்ச புகாரில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
பத்திரப்பதிவுத் துறையில் குறையாத லஞ்சம்
இரண்டாவது இடம் பிடித்த பத்திரப்பதிவுத் துறையில் 211 ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை 2019-20 இல் 205 ஊழியர்கள் மீது பதிவு செய்த வழக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, லஞ்சப் புகார்கள் சிறிதும் குறையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஊரக வளர்ச்சியில் லஞ்சம் அதிகம்
மூன்றாவது இடம் பிடித்த ஊரக வளர்ச்சி துறையில் 195 ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை 2019- 20 இல் 141 ஊழியர்கள் மீது பதிவு செய்த வழக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 54 ஊழியர்கள் அதிகமாக சிக்கியுள்ளனர்.
டாஸ்மாக் துறையைப் பொறுத்தவரையில் 2019-20 ஆண்டுகளில் 31 ஊழியர்கள் லஞ்சப் புகாரில் சிக்கினர். ஆனால், 2020-21 இல் இரண்டு மடங்காக அதிகரித்து 67 ஊழியர்கள் லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளனர்.
காவல்துறையை பொருத்தவரையில், 2019-20இல் 48 காவலர்கள் லஞ்சப் புகாரில் சிக்கியதாகவும், ஆனால் 2020-21இல் சற்று குறைந்தது 35 காவலர்கள் மட்டுமே சிக்கியுள்ளனர்.
மொத்தம் 43 அரசுத்துறைகளில் சிறைத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கருவூல கணக்குத்துறை ஆகிய 3 துறைகளில் மட்டும் பணிபுரியும் அரசு ஊழியர்களின் மீது லஞ்சப் புகார் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
தண்டனை கிடைத்ததா?
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததில் 2019-20 இல் 102 வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்தாண்டு, அது பாதிக்கும் குறைந்து 41 வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை