சென்னை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்களை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையையும், 200 சாட்சிகளின் வாக்குமூலமும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணை முழுமையான விசாரணை போல் நடத்தப்பட்டுள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை கையேடு 1992இல் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை நடைமுறையின் படியும், பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த வரைமுறைகளின் படியும்
இந்த ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையிலேயே ஒரு முழுமையான விசாரணைக்கு தேவையான சாட்சிகளை விசாரித்தல், ஆவணங்களை தடயவியல் துறைக்கு அனுப்பி உண்மைத்தன்மையை கண்டறிதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றி 200 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி லஞ்ச ஒழிப்புத் துறை கையேட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள, வழக்கு தொடர்ந்த மனுதாரரின் பின்புலம், அவரின் நோக்கம், உண்மையிலேயே இது பொது நல வழக்குக்கு உகந்ததா என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை, தமிழக அரசு சென்னை மாநகராட்சி, அமைச்சர் எஸ் பி வேலுமணி தரப்பில் பதில் வாதம் செய்வதற்காக இந்த விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.