சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்றுமுதல் (ஆகஸ்ட் 23) மானிய கோரிக்கைகள் தொடங்கியுள்ளன. அதன்படி முதல்நாளான இன்று நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இன்று நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேரவையில் அரை நூற்றாண்டை நிறைவுசெய்யும் துரைமுருகனைப் பாராட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மீது தலைவர்கள் பாராட்டிப் பேசினர்.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இன்றுமுதல் துறை மானியக் கோரிக்கையை நீர்வளத் துறையின் அமைச்சரான துரைமுருகன் தாக்கல்செய்கிறார். 100 ஆண்டுகால சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாக அவையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார் துரைமுருகன்.
கருணாநிதி, அன்பழகன் மறைந்த பிறகு அவையை நடத்தக்கூடிய முன்னவராக உள்ளார், எனக்கு முன்னோடியாக உள்ளார். வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது என்னை இளைஞராகப் பார்ப்பதாகச் சொல்வார். ஆனால் நான் அவரை அண்ணா, கருணாநிதி இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.
கருணாநிதிக்கு வழித்துணையாக இருந்திருக்கிறார். கருணாநிதி துரைமுருகனை, 'துரை' என அன்போடு அழைப்பார். அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். அதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பொறாமையாக இருக்கும்.
துரைமுருகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்திருந்தபோது அவரை நேரில் சென்று இரவு முழுவதும் இருந்து ஆறுதல் தெரிவித்து வந்தார் கருணாநிதி.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளின் பெயர்களையும் மடமடவென சரியாகச் சொல்லக்கூடியவர். 1971ஆம் ஆண்டு காட்பாடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராணிப்பேட்டை தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எந்தத் துறை கொடுத்தாலும் சிறப்பாகச் செயல்படுபவர். திமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. சட்டப்பேரவையில் பொன்விழா நாயகனுக்கு வாழ்த்துகள்" என்றார்.
இதையும் படிங்க: தேசியக்கொடி மீது பாஜக கொடி... இது சரியா? - கேள்வி எழுப்பும் காங்கிரஸ்