சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் இன்று (செப்.7) செய்தித்துறை புதிய அறிவிப்புகளுக்கு பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் அவையில் பேச முயன்றார்.
அப்போது மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர்கள் பேச போதிய நேரமில்லாததால் சபாநாயகர் அவரை இருக்கையில் அமர சொன்னார்.
அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து வாங்கும் துணியை கொச்சைப்படுத்துவது சரியல்ல" என்றார்.
இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், "கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனம். ஆனால் கடந்தாண்டில் வாங்கிய துணிகள் தரமில்லாத துணிகள்.
அதனால் அதனை விற்க விளம்பரம் கொடுத்துள்ளனர். அப்படி விளம்பரம் செய்ததற்கு மட்டும் 4 கோடி ரூபாயை கடந்த அரசு செலவு செய்திருக்கிறது" என்றார்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அவை முன்னவர் சமாளித்து பேசுகிறார். அதிமுக அரசு கரோனா வைரஸ் தொற்று காலத்தில் நெசவாளர்களுக்கு 340 கோடி ரூபாய் மானியமாக கொடுத்துள்ளது.
கைத்தறி நெசவாளர்கள் நெய்த துணிகளை விற்பனை செய்ய கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் வாங்கப்படுகிறது.
இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்தால் பொதுமக்கள் வாங்குவதற்கு அச்சப்படுவார்கள்" என்றார்.
இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், "ஒரு சவால் செய்கிறேன். உங்கள் ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் லாபத்தில் இயங்கும்" என்றார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்