தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, அமைச்சர் க. பாண்டியராஜனுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார்.
அப்போது பேசிய தங்கம் தென்னரசு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் தங்களால் முடியாது என்று தெரிந்தும் அமைச்சர் பாண்டியராஜன் பேரவையில் தவறான தகவல்களைப் பதிவு செய்ததாகக் குற்றஞ்சாட்டினார். ஆனால், அதனை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றும், சட்டத்தில் இலங்கை தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை தரும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
அதேபோல், இதெல்லாம் தெரிந்தும் அவையில் தவறான தகவல்களைத் தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்காமல், சபாநாயகர் மகா உத்தமராக நடந்துகொள்கிறார் என்று விமர்சித்தார்.