இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"முன்னதாக, தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டும், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் முதற்கட்டமாக 2020 டிசம்பர் 7 அன்று முதுகலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணாக்கருக்கான கல்லூரிகள் திறக்கவும், 2021 பிப்ரவரி 8 முதல் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரிகள் திறக்கவும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கல்லூரிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டது.
அவ்வாறு கல்லூரிக்கு வரும் மாணாக்கருக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. தற்போது, தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலைக் கருத்தில்கொண்டு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், இன்று (மார்ச் 22) உயர் கல்வித் துறை முதன்மைச் செயலருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரையை ஏற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, உயர் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டது.
கோவிட் தொற்று அதிகரித்துவருவதாலும், கோவிட் தொற்றால் மாணவர்களும் அதனால் பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும், மாணவர்கள், பொதுமக்களின் நலன்கருதி, மார்ச் 23ஆம் தேதிமுதல் (நாளை) உயர் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் வகுப்புகள் இணைய வழி முறையில் வாரத்தில் ஆறு நாள்கள் தொடர்ந்து நடைபெறும்.
அறிவியல் பொறியியல் மற்றும் பல வகைத்தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு குறிப்பாக இறுதிப்பருவ மாணாக்கருக்குச் செயல்முறை வகுப்புகள், செயல்முறைத் தேர்வுகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடித்திடவும், மேலும், இந்தப் பருவத்திற்கான இறுதித் தேர்வுகளை இணைய வழியில் மட்டுமே நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை எண். (நிலை) 327, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் இன்று வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.