சென்னை: சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு, கோவையிலிருந்து 118 பயணிகளுடன் காலை 7.20 மணிக்கு தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து 127 பயணிகளுடன் காலை 7.30 மணிக்கு தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொல்கத்தாவில் இருந்து 148 பயணிகளுடன் காலை 7.35 மணிக்கு தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டம் அடித்துக் கொண்டு இருக்கின்றன.
இதனையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், வானிலை ஆராய்ச்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அவர்களிடம் பனிமூட்டம் மேலும் நீடிக்கும், ஆனால் இந்த விமானங்களை பெங்களூர், திருச்சி, கோவை விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்புவது பற்றி ஆலோசனையில் ஈடுப்படனர்.
இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக சென்னையில் தரையிரங்க முடியாமல் வானில் தத்தளித்துக் கொண்டிருந்த கோவை மற்றும் கொல்கத்தாவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கோவை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஹைதராபாத் விமானம் தொடர்ந்து வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கு இடையே, சென்னையில் இருந்து காலை 7.55 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8.20 மணிக்கு கோவை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 8.30 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதேபோல் டெல்லி லண்டன் விமானங்களும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் ரயிலுக்காக காத்திருப்பவரா நீங்கள்? இன்று இதை கவனிக்கவும்!