சென்னை ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க. நகர் போன்ற இடங்களில் கரோனா பாதிப்பு அதிதீவிரமாக உள்ளது. இதுவரைலும் மொத்தம் 73 ஆயிரத்து 728 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 49, 587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும் பகுதியான கண்ணகி நகரில் ஆரம்பத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அது மாநகராட்சி, சுகாதார துறைக்கு சவாலாக அமைந்தது. பலர் கண்ணகி நகரை அடுத்த தாராவி என தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கண்ணகி நகரில் சராசரியாக ஒருநாளைக்கு 10 நபர்களுக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டு வருகின்றது.
சென்னையில் மொத்தம் 1,979 குடிசைப் பகுதிகள் உள்ளன. அதில் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக 24 ஆயிரம் குடியிருப்புகளைக்கொண்டு இருப்பது கண்ணகி நகர். சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்துவருகின்றனர்.
மக்கள் அதிகமாக வாழும் கண்ணகி நகரில் ஒருவருக்கு கரோனா வந்தால் கூட மற்றவருக்கும் தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு அதிகமுண்டு. இதை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு முதலில் இருந்தே கண்ணகி நகருக்கு தனி கவனம் செலுத்திவந்தது.
இதையும் மீறி ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் அப்பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அடுத்தடுத்த சில தினங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு அங்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தீவிரத்தன்மையை உணர்ந்த அரசு, கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்த அனைவராலும் வீட்டில் தனிமைபடுத்துவதற்கு வசதி இல்லாததால் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மையத்தில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துவருகின்றது.
இதையும் படிங்க... தாராவியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா
இதுகுறித்து பேசிய தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான், "கண்ணகி நகரில் கரோனா வைரஸ் தடுப்பதற்கு மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தோம். தற்போது கண்ணகி நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 150 முதல் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது. சென்னையில் முதல் முறையாக கண்ணகி நகரில் உள்ள அனைவருக்கும் இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி 180 தன்னார்வலர்களைக்கொண்டு வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
தினமும் நான்கு மருத்துவ முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன. மிக முக்கியமாக மக்களின் ஒத்தொழைப்பு முழுமையாக இருந்தது. இதனால் நோய்த்தொற்றை பெருமளவில் கட்டுப்படுத்திவிட்டோம். தற்போது கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகர் ஆகிய மூன்று பகுதிகளிலும் நேற்றுமுன்தினம்வரை 240 நபர்கள் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.
கண்ணகி நகர் பகுதியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். இதைத் தவிர்த்து அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் உரையாடி மக்களின் பயத்தை போக்கி அவர்களுக்கு பரிசோதனை செய்வது, பரிசோதனை செய்யும் நபர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்வது போன்ற பல வேலைகளை செய்துவருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தன்னார்வலர் ஆலிஸ் கென்சி மலர், " எங்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக 150 வீடுகளில் தினமும் சென்று பரிசோதனை செய்துவருகின்றோம். தொடக்கத்தில் எங்களிடம் பேச மக்கள் தயக்கம் காட்டினார்கள். பின்னர் தினமும் அவர்களிடம் பேசப் பேச அவர்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் அவர்களே உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். நாங்கள் அவர்களை அந்தப் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைசெய்து மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொடுப்போம்.
கரோனா அறிகுறி இருந்தால் மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா பரிசோதனை செய்துகொள்வதற்க்கு உதவியாக இருப்போம். அதுமட்டுமின்றி தினமும் ஒரு இடத்தில் கூடி மக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... தாராவியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா : எப்படி சாத்தியமானது?
தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மருத்துவ முகாம்கள் நடத்திவருவதாலும், மக்கள் முகக் கவசம் அணிவதும், தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவது மூலம் கண்ணகி நகர் பகுதியில் நோய்த்தொற்று வெகுவாக குறைந்து வருகின்றது.
கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கலாவதி நம்மிடம் பேசியபோது, "தன்னார்வலர்கள் தினமும் எங்களை அணுகி முகக்கவசம் அணிய வேண்டும், வெளியில் சென்றுவந்தால் நன்றாக கை கழுவ வேண்டும் என்பவற்றை அறிவுறுத்திவருகின்றனர். மருத்துவ முகாம்களையும் நடத்திவருகின்றனர். எங்களுக்கு இது மிகவும் உதவியாக உள்ளது" என்றார்.
மக்களின் தொடர் ஒத்துழைப்பால் தொற்று பரவும் அபாயம் அதிகம் இருந்த தாராவி பகுதியில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போன்று தற்போது சென்னை கண்ணகி நகர் பகுதி மக்களும் கரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க... ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி, கரோனாவை வென்றது எப்படி?