சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (பிப்.10) முதல் வரும் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: "அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியிலும் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு கூட மழைப் பதிவாகவில்லை. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், "தற்போது பனிப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரங்களில் 21 டிகிரி செல்சியஸும், பகல் நேரங்களில் 31 டிகிரி செல்சியஸுமாக வெப்பநிலை பதிவாகக்கூடும். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இல்லை'' என்றார்.