சென்னை விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்லும் சரக்கு விமானத்தில், சரக்கு பாா்சல்களில் மறைத்து பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவினர் சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் ஆஸ்திரேலியா செல்ல இருந்த சரக்கு விமானத்தில் இருந்த பாா்சல்கள சோதனையிட்டனா்.
அப்போது பட்டுப்புடவைகள் அடங்கிய பாா்சல்களில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ சூடோ நெப்ரின் என்னும் போதைப் பொருளை அவர்கள் கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.80 லட்சம். இதையடுத்து மத்திய போதை தடுப்பு தனிப்படையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த பட்டுப்புடவை பாா்சல்கள் காரைக்காலில் உள்ள ஒரு கொரியா் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ,காரைக்கால் சென்று, அந்த கொரியா் நிறுவனத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். மேலும் பட்டுப்புடவை பாா்சல்களை அனுப்பி்யவர் சென்னையை சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினா் சென்னையில் உள்ள அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டாா்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களுக்கு போதை தடுப்பு பிரிவினர் தகவல் கொடுத்தனர். பின்னர் ஆஸ்திரேலியா விமானநிலையத்தில் 4 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அந்த பொருள் மீண்டும் சென்னைக்கு மற்றொரு சரக்கு விமானத்தில் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கடத்தல்காரிடம் அலுவலர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்ற கோணத்தில் போதை தடுப்பு பிரிவு அலுவலர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட 12 கிலோ சூடோ நெப்ரின் போதைப்பொருளின் சா்வதேச மதிப்பு ரூ.1.2 கோடி என போதை தடுப்பிரிவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 3000 கிலோ ஹெராயின் விவகாரம்: தாலிபான்கள் நால்வர் உள்பட 6 பேர் கைது