சென்னை: திமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசுவின் மகன் திலீபன் ராஜின் திருமண விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திருமண விழாவை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். பின்னர், மணமக்கள் திலீபன் ராஜ் - ஐஸ்வர்யாவை வாழ்த்தினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், " மூன்று நாட்களாக பெய்த மழை- புயல் அதெல்லாம் எப்படி சமாளித்தோம்? பார்க்கிறவர்கள் எல்லாம் இதைத்தான் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா என்ற கொடிய நோய்த்தொற்று இருந்தது, அதிலிருந்து மீண்டோம். அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் மட்டுமல்ல, அனைவரும் மருத்துவத்துறை அமைச்சராக மாறினோம், அதனால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.
அது முடிவதற்கு முன்னாலேயே, வெள்ளம் வந்தது. பெரிய மழை வந்தது. அதையும் சமாளித்து அதிலும் வெற்றி கண்டோம். இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது.
நேற்றிலிருந்து ஃபோனை வைக்கவே முடியவில்லை. எல்லோரும் போன் செய்து, ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள், ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள் என்று பாராட்டினார்கள். சமூக வலைத்தளங்களில் எல்லாம் பாராட்டுகள்தான் வந்து கொண்டிருக்கிறது.
பல இடங்களில் பேசுகிறபோது சொன்னேன். இங்கேகூட மகேஷ் பொய்யாமொழி பேசுகிறபோது 'நம்பர் ஒன்' முதலமைச்சர் என்று பாராட்டினார். இதை எனக்கு அதிகமான பெருமையாகவோ பாராட்டாகவோ நினைக்கவில்லை. என்றைக்கு 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று வருகிறதோ அன்றைக்குத்தான் எனக்குப் பெருமை. அதையும் நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின் என்பதை இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'. அதனால் அதையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்றார்.