இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “முற்பட்ட சாதியினருக்கு பொருளாதார அளவுகோளில் இடஒதுக்கீடு என்பது முற்றிலுமாக உள்நோக்கம் உடையது. தமிழ்நாட்டில் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை குலைக்கின்ற வகையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் வாய்ப்புகளை முற்றிலுமாக நசுக்குகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கை விரும்புகிறோம்.
இந்த நிலையில்தான் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, உயர் சாதியினர் 28 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்ற வரையறையை நிர்ணயித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இது பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் தேர்வு எழுதாமலேயே பணிகளுக்கு சென்றுவிட முடியும் என்று அந்த வங்கி ஒரு வரையறையை வைத்திருக்ககூடிய அளவில்தான் இந்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்கித் துறைகளில் உயர் சாதியினருக்கு இடம் என்பது மிக அதிகளவில் இருக்கும்போது, இவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி சாதி மக்களுக்கான வேலை வாயப்பினை முற்றிலுமாக அழிக்கின்றது. எனவே இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமானது. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதை சட்ட விரோதமானது என்றே புரிந்துகொள்ள முடியும்.
அதனால் சட்ட விரோதமான இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.