சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதி துரைசாமியும் வரும் 21ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை பொறுப்புத்தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வரும் (பொறுப்பு தலைமை நீதிபதி) நீதிபதி எம்.துரைசாமி வரும் 21ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால் நீதிபதி டி.ராஜா தலைமை நீதிபதி அலுவலகப் பணிகளை கவனிப்பார் எனவும்; வரும் 22ஆம் தேதி முதல் அவர் பொறுப்புத் தலைமை நீதிபதிகளுக்கான பணிகளை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
வாழ்க்கை வரலாறு : நீதிபதி டி.ராஜா, மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். பள்ளிப்படிப்பை தேனூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலும், உயர் கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும், பின்னர் பி.யூ.சி படிப்பை வக்ஃப் வாரிய கல்லூரியிலும், பி.ஏ. மற்றும் ஏம்.ஏ. படிப்பை மதுரை கல்லூரியிலும் முடித்து, கடந்த 1988ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
பிறகு மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜூனியராகப் பணியைத் தொடங்கிய ராஜா, பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி செய்தார். சிவில், கிரிமினல், அரசியல் சாசன வழக்குகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுவர்.
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான ராஜா, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றி இருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டைக்கொள்கையை கையாள்கிறதா? - திருமாவளவன் எம்.பி.