கழிவுநீரை மூன்றாம் நிலைக்கு சுத்திகரிப்பு செய்து அவற்றை தொழிற்சாலை மற்றும் வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி சென்னை குடிநீர் வாரியத்தால் கோயம்பேட்டில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (எதிர் சவ்வூடு பரவுதல் முறை) அமைத்து, அந்த நீரை சிப்காட் நிறுவனத்திற்கு சொந்தமான இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 60 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதித்து பணியை முடிக்க 15 ஆண்டுகளுக்கு திட்டம் வகுக்கப்பட்டு ரூ. 394 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ. 486.21 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை கோயம்பேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொடுங்கையூரிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் ஆலையை முதல்வர் ஏற்கனவே திறந்து வைத்துள்ள நிலையில், கோயம்பேட்டில் உள்ள ஆலையை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் அமைந்துள்ள தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களின் மூலம் சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவு நீரில் 20 சதவீதம் அளவிற்கு மறு சுழற்சி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம், சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு சராசரியாக நாள்தோறும் 29.25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.