சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையின் கடைசி நேரத்தில் நீட் கட் ஆப் மதிப்பெண்ணை, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக குறைப்பது சரியல்ல எனவும், மாணவர் சேர்க்கையை மாநில மற்றும் மத்திய அரசுகள் மட்டுமே நடத்திட வேண்டும் எனவும், பூஜ்ஜியம் பர்சென்டைல்ஸ் பெற்றவர்களும் பங்கேற்கலாம் என்பதால் தகுதி குறைந்ததாக கருத முடியாது எனவும்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் மற்றும் படித்த பின்னர் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால்தான் குறிப்பிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், இறுதிகட்ட மாணவர் சேர்க்கையின் பொழுது, கட் ஆப் மதிப்பெண்ணை குறைப்பது என்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமானதாகும். அதேபோல் நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை சூதாட்டம்போல் (Gambling) மாற்றும் இத்தகைய நடைமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். அதேநேரம், மருத்துவ இடங்கள் காலியாக போவதையும், முறைகேடுகளையும் தடுக்கும் வகையிலும், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதி செய்திடும் வகையிலும், சமூக நீதியைக் காத்திடும் வகையிலும், மாணவர் சேர்க்கை நடைமுறைகளை வகுத்திட வேண்டும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மாநில அரசும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசும் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை எக்காரணம் கொண்டும், அந்நிறுவனங்களே நேரடியாக நடத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. அவைகளுக்கு மாப் அப் கவுன்சிலிங் மற்றும் ஸ்ட்ரே கவுன்சிலிங் நடத்திட அனுமதி வழங்க கூடாது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளின் 100 விழுக்காடு இடங்களுக்கும் மாநில மற்றும் மத்திய அரசுகளே கட்டணத்தை நியாயமான முறையில் நிர்ணயித்திட வேண்டும். ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்
கட்டணத்தை கவுன்சிலிங்கின்போதே டிடி (DD) மூலம் செலுத்தும் முறையை கொண்டு வர வேண்டும். தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை பணமாக வசூல் செய்வதையும், ரசீதுகள் வழங்காமல் வசூலிப்பதையும், கட்டாய நன்கொடைகள் பெறுவதையும் தடுக்க வேண்டும்.
கட்டாய நன்கொடைச் சட்டத்தை வலுப்படுத்தி, முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் நிறுவனங்கள் மீது கட்டாய நன்கொடைச் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுழைவுத் தேர்வுகளில், சமூக நீதிக்கு எதிராக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும். தரவரிசை (ranking) அடிப்படையில், இட ஒதுக்கீட்டையும் முழுமையாக பின்பற்றி கடைசி இடம் நிரம்பும் வரை மாநில மற்றும் மத்திய அரசுகளே மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.
கடந்த காலத்தில், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள், CET - Common Entrance Tests என்ற பெயரில் நடப்பட்டன. அதில் சிலவற்றில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இல்லை. முதுநிலை மருத்துவம் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணை 40 சதவீதமாக உச்ச நீதிமன்றம் நிர்ணயித்ததால், தமிழ்நாட்டின் நுழைவுத் தேர்வு அடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையை நடத்தியபொழுது பி.சி முஸ்லீம் BC(M), SC(A) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்களை பயனாளிகள் முழுமையாகப் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஒரு நுழைவுத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் என்பதை நிர்ணயிப்பதை கைவிட வேண்டும். நுழைவுத் தேர்வு என்பது ஒரு போட்டித் தேர்வுதானே தவிர, தகுதிக்கான தேர்வல்ல. முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதி என்பது, எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவராக பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுதான்.
தேர்வு கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என குறைத்ததால், முதுநிலை மருத்துவர் மாணவர்கள் உடைய தகுதி குறையவில்லை. மருத்துவர்களின் சமூக, பொருளாதார மற்றும் படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதை கருத்தில் கொண்டு முதுநிலை மருத்துவ படிப்பில் சில பாடப்பிரிவுகளை தேர்வு செய்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு அதிகளவில் சம்பளம் மற்றும் வருமானமும் கிடைக்கும் என்பதாகும். சில பாடப்பிரிவுகளில் காலியாக இருந்தாலும் மருத்துவப் படிப்பில் வேலை கிடைக்காது என்பதால் சேர்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதிக கட்டணம் செலுத்துவோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதில் பட்டியலின மாணவர்களுக்கு ஒரு சதவீதம் மாணவர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “அருமையான ஊராட்சியை திமுகவைச் சேர்ந்த 3 பேர்தான் கெடுக்கின்றனர்” - ஊராட்சி மன்றத் தலைவர் குற்றச்சாட்டு!