இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தியாவில் மொத்தமுள்ள 563 சுங்கச்சாவடிகளில், சுமார் 10 விழுக்காடு அதாவது 48 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நடைமுறையின்படி, இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இப்போதுள்ள சூழலில் இந்த கட்டண உயர்வு ஏற்க முடியாதது. ஒருபுறம் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் நேரடியாக சாலை பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்னொரு புறம் பெட்ரோல், டீசல் மீது சாலைக் கட்டமைப்பு வரி என்ற பெயரில் இன்னொரு வரி வசூலிக்கப்படுகிறது.
இவை தவிர வாகனங்களை வாங்கும் போது சாலைவரி என்பது தனியாக வசூலிக்கப்படுகிறது. ஒரு சாலையை பயன்படுத்த 3 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?. சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கண்மூடித்தனமாக உயரக்கூடும். கரோனா பரவல் அச்சத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டண உயர்வும், அதனால் ஏற்படக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வும் பொது மக்களை கடுமையாகப் பாதிக்கும்.
எனவே, தமிழ்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான சுங்கக் கட்டண உயர்வை குறைந்தது ஓராண்டுக்கு ஒத்தி வைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.