சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் நேற்று (மார்ச் 14) தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தீயணைப்புத் துறையினருடன் சேர்ந்து மாயமான மயில் சிலை, ராகு, கேது சிலைகளை தேடினர். காலை முதல் மாலை வரை தேடியும் 3 சிலைகளும் கிடைக்கவில்லை.
ஆனால், தெப்பக்குளத்திற்குள் வீட்டிற்கு வைத்து வழிபடும் விநாயகர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் வழிபட்டு விட்டு பிறகு தெப்பக்குளத்தில் வீசப்பட்ட சிறிய 3 விநாயகர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரட்டை பாம்பு சிலை ஒன்றும் கிடைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கற்சிலை என்பதும், இது வீட்டில் வைத்து வழிபட்ட சிலையா? கோயில் சிலையா? என்பது தெரியவில்லை. ஆய்வு செய்த பிறகு தெரியவரும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மயிலாப்பூர் தெப்ப குளத்தில் மாதிரி படம் எடுத்து சிலைகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக அனுமதி பெற்று அடுத்த வாரம் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் சிலைகள் கண்டறியப்படும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நியாயத்துக்கு துணைநின்ற கம்யூனிஸ்ட் நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கு - நாமக்கல்லில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை