'ஒன்றிய அரசு என்று சொல்வதை குற்றம் போல நினைக்க வேண்டாம்; அரசியலமைப்பின் முதல் வரி இந்தியா. அதாவது பாரதம் பல மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம் என்று தான் அரசியலமைப்புச்சட்டம் தெரிவிக்கிறது' என ஒன்றிய அரசு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.
முதலமைச்சரிடம் விளக்கம் கேட்ட நயினார் நாகேந்திரன்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளாக, ஆளுநர் உரை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. அதில்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், 'மத்திய அரசை, ஒன்றிய அரசு எனக் கூறுவது ஏன்?' என முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரினார்.
'அரசியல் சாசன சட்டத்தில் ஒன்றியம் எனக் கூறப்பட்டுள்ளது'
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'ஒன்றிய அரசு எனக் கூறுவதை குற்றமாக கருத வேண்டாம். நமது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டதை தான் நாங்கள் சொல்கிறோம். சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.
ஒன்றியம் எனும் சொல்லாடலைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்
அண்ணா, கலைஞர் கருணாநிதி கூறாததை நாங்கள் சொல்வதாக விமர்சிக்கின்றனர். 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா இதுபற்றி பேசியிருக்கிறார். 'ஒன்றியம்' என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை.
இதை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம். இது கூட்டாட்சி தத்துவத்தை பிரதிபலிப்பது' எனத் தெரிவித்தார். மேலும் 'இதை தான் மீண்டும் பயன் படுத்துவோம்' எனத் தெரிவித்தார்.
மீண்டும் பதில் பெற்ற நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து 'இந்தியாவில் இருந்து பிரிந்தது தான் மாநிலங்கள்' என நயினார் நாகேந்திரன் கூறியதற்குப் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை, அனைத்து மாநிலங்கள் ஒன்றிணைந்து உருவாகியது தான் இந்தியா' என விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: 'அணில விடுங்க... அதிமுகவிடம் கேள்வி கேளுங்க' - ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி