சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியத்தில் அமைந்துள்ள அரசு இருதய நோய் மருத்துவமனை வளாகத்தில் கோவிட் 19 தொற்றுக்கான வகைபடுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், மார்பு வரைபடம், ரத்த சர்க்கரை அளவு, இ.சி.ஜி., பிராணவாயு பரிசோதனை, வெப்பப் பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போர்கால அடிப்படையில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளபடுகின்றன. கரோனாவைக் கண்டு அச்சப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம். உங்களைக் காக்கத்தான் நாங்கள் இருக்கிறோம்.
மன உறுதியுடன் இருங்கள். கரோனாவுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தியை வலுவாக்க மன உறுதியும் முக்கியப் பங்குவகிக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளி, 90 வயது மூதாட்டி எனப் பல பேரை நாம் மீட்டுள்ளோம். ஆகவே, கரோனா குறித்த அச்சத்தைக் கைவிடுங்கள்.
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், சாதாரணமாக மெடிக்கலில் மாத்திரை வாங்கிப் போடுவதைத் தவிருங்கள். உங்களுக்காக நடமாடும் பரிசோதனை மையத்தை ஏற்படுத்தியுள்ளோம். அங்கு சோதனை செய்துகொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் சுய மருத்துவத்தை அணுகாதீர்கள்.
பிளாஸ்மா தெரபியின் மூலம் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 13 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவிலிருந்து மீண்ட அனைவரும் பிளாஸ்மா தெரபிக்கு ஒத்துழைத்தால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். அனைவரும் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வாருங்கள்” என்றார்.
இதையும் படிங்க: 'குணமடைந்தோர் பிளாஸ்மா தெரபிக்கு முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்