சென்னை: பராமரிப்பில்லாத பழமையான கோயில்களில் இருந்து ஒரு செங்கலைக்கூட அகற்றக்கூடாது என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், சிலைகளை பாதுகாப்பது மற்றும் கோயில் சீரமைப்பு பணிகளுக்காக குழு அமைப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்களில் ஒருவரான ரங்கராஜன் நரசிம்மன், கருர் மாவட்டம் கார்வழி என்ற இடத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோயிலை இடிக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த கோயிலை எதற்காக இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது? இதேபோல் எத்தனை கோயில்களை இடிக்க அறநிலையத்துறை திட்டம் வைத்துள்ளது? என்று கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், இந்த கோயிலை இடிப்பதற்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், இந்த கோயில் மட்டுமல்லாமல் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த கோயிலிலும் ஒரு செங்கலைக்கூட அகற்றக்கூடாது என்றும், இதை அறநிலையத் துறை ஆணையர் மூலம் இணை ஆணையர் மற்றும் அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.