சென்னை: தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜூன் 27) திறந்துவைத்தார். அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆர்.கே. நகர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர், பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பார் என நம்புகிறேன்.
மேலும் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் 250 பேருக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.
ஆர்.கே. நகர் தொகுதியில் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிகள், மாணவ, மாணவிகளுக்கான ஊக்கத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், பார்வையற்றவர் இல்லத்திற்கு கணினி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன” என்றார்.
இதேபோன்று ஆர்.கே. நகர், ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் பேருக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டதாக வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 23 மாவட்டங்களில் துணிக்கடைகள் திறக்க அனுமதி