பெங்களுரூ: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய தண்டனை காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் விரைவில் விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து சசிகலா விடுதலை தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்திருந்தார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஆர்.லதா, " சிறை ஆவணங்களின்படி அபராதத் தொகையை செலுத்தினால் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி அன்று விடுதலை செய்யப்படலாம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கின் இரண்டாம் குற்றவாளியான சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகைக்கான செலுத்துவதற்காக, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பெங்களுரு கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம் தற்போது கலைக்கப்பட்டுவிட்டது. அதனால் அபராதத் தொகையை செலுத்துவதற்கான மனு கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அதன் நிலவரம் என்ன? என்பது குறித்து இன்று (நவம்பர் 18) மாலைக்குள் உறுதியாக தெரியவரும். அபராதம் செலுத்திய பின்னர் தான் சசிகலாவின் விடுதலை குறித்து நீதிமன்றத்தில் முறையாக முறையிடப்பட்டும்" என்று கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், 2,3,4ஆம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சுதாகரன் ஏற்கனவே தனது அபராதத் தொகையான ரூ.10 கோடியை செலுத்தியிருந்தார்.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சசிகலாவின் விடுதலை தமிழ்நாட்டு அரசியலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சசிகலா விடுதலை எப்போது? - சிறை நிர்வாகம் விளக்கம்