சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமனின் இறுதிச் சடங்கில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. அதன் எதிரொலியாக மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
அதன்படி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியும் அதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடல் பாதுகாப்புடனும் அரசு மரியாதையுடனும் அடக்கம் செய்யப்படும் எனவும், இறக்கும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நிவாரணம், 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அவர்களின் பணியைப் பாராட்டி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றும், அவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில் எவருக்கேனும் கரோனோ தொற்று ஏற்பட்டால், மருத்துவத் துறையின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப அந்த மருத்துவப் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை செய்யவும், அந்த மருத்துவமனையின் பிரிவில் முழுமையாக நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்குப் பிறகு மீண்டும் அப்பிரிவில் மருத்துவப் பணிகளைத் தொடரவும் அனுமதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.