சென்னை அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஐந்து நாள்களாகப் போராட்டம் நடத்திவரும் மருத்துவர்களை அரசு அழைத்துப் பேசவில்லை.
இதில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் இரண்டு பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆறாவது, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால்தான் அரசு மருத்துவர்களில் சம்பளத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் வைத்துக்கொண்டு மருத்துவர் நியமனம் என்பது சரியாக இருக்காது. வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு மருத்துவர் நியமனம் இருக்க வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி போராட்டத்திற்குத் தீர்வு காண வேண்டும். மருத்துவர்கள் போராட்டத்தின்போது நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள் பொறுப்பல்ல, அரசுதான் பொறுப்பு" எனக் கூறினார்.