ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏழாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, அனைத்து மருத்துவர்களும் இன்று மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என எச்சரித்து உள்ளது. ஆனாலும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இது தொடர்பாக சென்னையில் அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் கூறும்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்கள் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் போன்றவற்றை இரவு பகலாக மேற்கொண்டு வருகிறது. எங்களின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் அழைத்துப் பேசினால் பத்து நிமிடத்தில் தீர்வு காண முடியும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மருத்துவர்கள் அரசியல் செய்கிறார்கள் என கூறுவது வருத்தமாக உள்ளது. அனைத்து மருத்துவர்களும் அரசு மருத்துவர்கள் என்பதை முதலமைச்சர் உணர்ந்து, அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
மேலும், அரசு அழைத்து பேசினால் எங்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை விட்டுக் கொடுத்தும் அரசு கூறுவதை ஒப்புக் கொள்ளும் அளவிற்கு பேசி தீர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க : தெலங்கானா அரசு ஊழியர்களுக்காக கொந்தளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள்