நாட்டில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். 20 வயது முதல் 40 வயதிற்குப்பட்டவர்களுக்கு அதிகளவில் தொற்று பரவி வரும் நிலையில், தற்போது குழந்தைகளும் தப்பவில்லை. அரசு அறிவித்த பல்வேறு தளர்வுகளாலும், தேர்தல் உள்ளிட்ட நிகழ்வுகளாலும், பள்ளி,கல்லூரி திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளாலும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஆனால், உருமாறிய கரோனா வைரஸ் 8 மாத குழந்தை முதல் 14 வயது குழந்தைகள்தான் அதிகளவில் தாக்குதலாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் குழந்தைகளுக்கு தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல், பக்க விளைவுகள் இல்லாமல் வேகமாகப் பரவிவருகிறது. அதேபோல் வழக்கமாகக் காணப்படும் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் வயிற்றுவலி வயிற்றுப்போக்கு, தடிப்பு, பசியின்மை, தடிப்புகள் உள்ளிட்ட புதிய அறிகுறிகள் காரணமாக இருக்கலாம் என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு அதிகமா?
லேசான அறிகுறிகளுடன் தொற்று பரவி வருவதால் குழந்தைகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லை. ஆனால், குழந்தைகள் பெரியவர்களுடன் அதிக நேரம் தொடர்பில் இருப்பதால், பரவ வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகின்றனர். எனவே, குழந்தைகளை வெளியில் அதிகமாகச் சுற்றவிடாமலும், மாஸ்க் அணிந்து செல்லும் பழக்கத்தை அதிகரிக்கவும், தகுந்த இடைவெளி பின்பற்ற அறிவுறுத்துமாறு டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இதேபோல, உணவில் போதியளவில் வைட்டமின் பி,டி ஜிங்க் , புரோட்டின் உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முகமது ஹக்கீம், "குழந்தைகளுக்கும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. லேசான அறிகுறி இருந்தாலே உடனே மருத்துவமனை சென்று பார்க்க வேண்டும். சிறு வயதில் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகளைக் கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும். சுடுநீரை மிதமான சூட்டில் குடிக்கப் பழக்க வேண்டும். சுத்தமாக இருப்பது வெளியில் விளையாடுவதைப் போதியளவில் குறைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதுதொடர்பாக பேசிய மருத்துவர் சாந்தி., "நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது, நாம் கணிக்க முடியாத வேகத்தில் இருப்பதால் வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையில் இருப்பதால் முடிந்தளவு பெற்றோர்கள் உரிய முறையில் பாதுகாப்பு வழிமுறைகள் சொல்லித் தர வேண்டும். அரசு ஆக்ஜிஐன் படுக்கைகளைக் குழந்தைகளுக்கும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு - கருத்துக்கேட்பு கூட்டத்தால் பரபரப்பான ஆட்சியர் வளாகம்