நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த எட்டு நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில் முக்கிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் ஷோபனா (23) உடல்நலம் பாதிக்கப்பட்டு முதலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு போதிய சிகிச்சையளிக்க முடியாத காரணத்தால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் போராட்டம் காரணமாக மருத்துவர்கள் வந்து முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் ஷோபனா உயிரிழந்தார் என்று அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேபோல் மருத்துவர்களின் போராட்டத்தால் தனது தந்தையை இழந்துவிட்டதாக இளைஞர் ஒருவர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிடலாம். ஆனால் போன உயிர் திரும்ப வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இறந்தவரின் உடலைத் திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டதற்கும் மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்பதாக அரசு மருத்துவமனை மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நியாயமானது...!'