சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கத்தின் சார்பில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், "தமிழ்நாடு அரசு சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை மூடும் வகையில் செயல்பட்டுவருகிறது.
நகர்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 700 முதல் 1,500 சதுர அடியும், கிராமப்புற பரிசோதனை நிலையங்களில் 200 சதுரடி பரப்பளவில் இருக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசு ஆணை வெளியிட்டது.
இது கார்ப்ரேட் கிளினிக் லேப்களுக்கு சாதகமாகவும் சிறிய கிளினிக்குகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இந்த அரசாணையைத் திருத்தி நகர்ப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 200 சதுர அடியாகவும், கிராமப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்கள் 150 சதுர அடியாகவும் நிர்ணயிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவிட்டால் செப்டம்பர் 8ஆம் தேதி தலைநகர் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம். மேலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த முயலுவது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.