சென்னை: தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில் 1,235 மருந்தாளுநர்கள் (Pharmacist) உள்ளிட்ட 4,624 துணை மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பி.பார்ம் (B Pharm) பட்டதாரிகளுக்கு மருந்தாளுநர் பணி அளிக்கப்பட வேண்டும் என ஜூலை 11ஆம் தேதி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தாளுனர் பணிகளுக்கு பி.பார்ம் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிட்டுள்ளார். அதில்,"தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதையேற்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது!
மருந்தாளுனர் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசு பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பார்ம் பட்டதாரிகள் பயனடைவார்கள். அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி: சிறப்புத் திட்டம் தீட்ட கமல் வலிறுத்தல்