சென்னை: உலக அளவில் உள்ள முன்னணி நகரங்களின் குற்ற சம்பவங்கள் குறித்து அமெரிக்க இணைய நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் உலகிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் குற்ற தலைநகரம் என்ற இடத்தை வெனிசுலா நாட்டின் தலைநகரம் கேரகஸ் பிடித்துள்ளது.
குற்ற நகரங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களில் இரண்டு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளது. இதில் டெல்லி 72வது இடத்திலும், உத்திரபிரதேசம் மாநிலத்தின் நொய்டா நகரம் 93வது இடத்தில் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் ஹரியானா மாநிலம் குர்கான் 103வது இடத்திலும், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு 110வது இடத்திலும், கொல்கத்தா 161வது இடத்திலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை 174வது இடத்திலும், தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் 185வது இடத்திலும், சண்டிகர் 187வது இடத்திலும், புனே 194வது இடத்திலும் அகமதாபாத் 253 வது இடத்திலும், மங்களூர் 296 வது இடத்திலும் உள்ளன.
மேலும் இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் சென்னை 208வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட சென்னை மாநகரத்தில் குறைவாகவே குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா நாட்டின் சிக்காகோ, சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், மலேசியா நாட்டின் கோலாலம்பூர், இத்தாலி நாட்டின் நெபிள்ஸ் போன்ற பகுதிகளை விட சென்னையில் குற்றங்கள் குறைவாக இருப்பதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற பிரச்சனைகளை விட லஞ்சமும், ஊழலும் தான் அதிக பிரச்சனையாக இருப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் குற்றங்கள் மிகவும் குறைவாக நடக்கும் மற்றும் மக்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்கள் பட்டியலில் முதலிடததில் கர்நாடகா மாநிலத்தின் மங்களூர் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் குஜராத் மாநிலத்தின் வதோதரா, சூரத், அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வு அறிக்கையில் உலகிலேயே குற்றங்கள் மிக மிக குறைவான குற்றங்கள் நடக்கும் பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஸ் அல் கைமா நகரம் இடம் பிடித்திருப்பதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்!