சென்னை: திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி பேரணி சார்பில் நாளை(அக்.4) பேரணி நடைபெற உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும் என நாடு முழுதும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் காவல் துறையால் நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேசம் அரசை கண்டித்தும் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திமுக மகளிர் அணி சார்பாக நாளை கிண்டி ராஜிவ் காந்தி சிலை முதல் ஆளுநர் மாளிகை வரை பேரணி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேசத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாளை (அக்டோபர்-5) மாலை 5:30 மணியளவில், கிண்டி ராஜீவ்காந்தி சிலையில் இருந்து நான் தொடங்கி வைக்க, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் கையில் ஒளியேந்தி பேரணியாக அணிவகுக்க இருக்கிறது திமுக மகளிரணி; மகளிரணியினர் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் உத்தரப் பிரதேச அரசு தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். ராகுல் காந்தியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இதனைச் செய்ய மத்திய அரசு, உ.பி. அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குத் தமிழக ஆளுநர் எடுத்துச் சொல்லவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்: சாமியை அகற்ற சாமியிடம் வேண்டிய ஓபிஎஸ்!